Sunday 1 March 2009

குழப்பத்தின் குழப்பமே !!


கலைஞர் ஐயாவை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று தோன்றும்.ஆனாலும் அவரை பற்றி எல்லோரும் எழுதுறதால நான் ஒன்றும் எழுதிறதில்லை.எப்போ எங்கட தலைவரை பற்றி அவதூறு கதைத்தாரோ ,அப்பவே எழுத வேணும் எண்டு நினைச்சிட்டன்.

யாரைய்யா சர்வாதிகாரி?
பயங்கரவாதம் என்றால் என்ன என்று பாலா அண்ணை கேட்ட கேள்விக்கு இன்னும் ஆனான அமெரிக்காவாலையே வரைவிலக்கணம் கொடுக்க முடியவில்லை.ஏனென்றால் அவைக்கு தெரியும் எந்தப்பக்கத்தால வரைவிலக்கணம் கொடுத்தாலும் முதலில மாட்டுபடுறது தாங்கள் தான் என்று.

அதே மாதிரி இப்ப நான் கேக்கிறன் இலக்கணத்தின் இலக்கணமே!! இலக்கியத்தின் சுரங்கமே!! சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் தர முடியுமா?

இந்த Blog பார்க்கிறதுக்கு உங்களுக்கு எங்கே நேரம் இருக்க போகுது?
கண்ணீரை பெருக்கி ...அனுதாப அலையை எழுப்பி அதில் உங்கட ஆலவட்டங்களை அலைய விட்டிட்டு நீங்கள் வரப்போகிற தேர்தலுக்கு காய்களை நகர்த்தி கொண்டு இருப்பீர்கள்..
தற்போதைய சூழலில் உங்களுக்கு சில காய்களை வெட்டி ஆகவேண்டும். இல்லாவிட்டால் உங்கட குட்டுக்கள் வெளியே வந்து உங்கட தேர்தல் பிரசாரத்தை பாழ்படுத்தி விடும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.உங்களின் ஆப்புக்கள் சீமான்,வைகோ வரிசையில் எமக்கான குரல்களில் யார் யார் மேலே பாயப்போகிறதோ பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

பெரியவரே !!
ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும்..உம்முடைய அதிகாரங்கள் மூலமாக சிலு சிலுப்புக்களை மட்டும் தான் அடக்கலாம்.எது எப்பிடியோ அடக்கி வாசிப்பது நல்லது.
இந்த வயசான காலத்தில நடு ராத்திரி பழிவாங்கல்களை உமது உடம்பு தாங்காது.

ஒரு காலத்தில் உம்மை பத்தி பேசும் போது அரசியல் சாணக்கியர் என்றே குறிப்பிடுவது உண்டு.ஆனால் தற்போது எல்லாம் 'குள்ள நரி 'என்று குறிப்பிட தவறுவதில்லை.
('இப்போ காகங்கள் எல்லாம் ரொம்ப உசாரய்யா...ஓட்டு வடைகள் கிட்டாது ..சில நேரங்களில் வடையில் உள்ள ஓட்டைகள் மட்டும் கிடைக்கலாம்')

சரி..சர்வாதிகாரி விடயத்துக்கு வருவோம்...
நான் பள்ளியில் படிக்கும் போது 'சாண்டில்யனின் கதைகளில் எனக்கு அலாதியான மோகம் உண்டு .. ஒரு தடைவை சாண்டில்யனின் புத்தகங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் பண்டார வன்னியனை பற்றிய புத்தகம் கிடைத்தது..அது அவ்வளவு சுவாரசியம் இல்லாத போதும் சில பகுதிகள் எனக்கு வாசிக்க தூண்டின..காக்கை வன்னியன் வரும் இடங்களில் எல்லாம் நூலாசிரியர் ரொம்பவே தத்ரூபமாக அனுபவிச்சு எழுதி இருந்தார். "இனம் இனத்தை சாரும்" என்று சொல்வார்கள்.இப்போ தான் தெரிகிறது அந்த நூலாசிரியர் எவ்வளவு ஈடுபாட்டோடு எழுதி இருப்பார் என்று.என்ன குழப்பமாக இருக்கிறதா?உங்களை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறேன்.அந்த நூலாசிரியர் சாட்சாத் நீங்களே தான். (இனம் இனத்தை சிலாகிப்பதில் தப்பேதும் இல்லையே)

கலைஞரே!கவித்துவம் மிக்கவரே!!
உளியின் ஓசை நயந்தவரே!!
எங்கள் உயிரின் ஓலம் உமக்கு கேட்கவில்லையோ?

சர்வாதிகாரம் பற்றி பேசுகிறீரே!
உமக்கு புகழ் மாலைகளை மழையாக பொழிந்து உம்மை எம் தாய்தமிழ் உறவுகள் கெடுத்து விட்டனரையா!!
எவன் வந்து காலில் விழுந்து கும்பிட்டாலும் உமக்கு ஒரு பூரிப்பு.
அங்கோ ஒருத்தி ஒப்பனையோடு வந்து தமிழகத்து அரியணையில் உட்கார்ந்து மக்களை எல்லாம் மாக்களாக்கி "அம்மா " என்ற சொல்லின் புனிதத்தை கெடுப்பவளின் காலில் அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விழுந்தவர்கள் இன்று உம்முடைய ஆட்சியிலும் எழுந்திருக்கவே இல்லை.இப்போ உங்கள் கால்களில் விழுகிறார்கள்.உண்மையில் தங்களை பெற்றவளின் கால்களில் விழுந்திருப்பார்களோ தெரியாது!!

மூத்தோரை கணம் பண்ணுவது எம் பண்பாடு.
ஆனால் காலில் விழுந்தால் தான் காரியம் ஆகும் என்பது உங்களை போன்ற கபடதாரிகளின் அரசியல் வாய்பாடு.
இன்று உமது காலில் விழுவோர் நேற்று 'அம்மாவின் ' கால்களில் விழுந்த அதே மக்கள் தான்.அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்..நீங்கள் தான் அவர்களை அப்படி மாற்றி வைத்துள்ளீர்களே!!
ஒரு விதத்தில் அவர்கள் தான் இதுக்கும் காரணம்..உங்களின் கால்களில் விழுவதற்கே ஓட்டு போட்டார்கள் இல்லையா?அனுபவித்து தான் ஆகணும்.

மஞ்சள் துண்டு பெரியவரே !!பெரியாரின் பட்டறையில் நீர் படித்தது இதுவோ ?
இது உமக்கு சர்வாதிகாரத்தின் வாய்க்காலாக தோன்றவில்லையோ??

நீர் படித்த படியால் தான் சிந்தித்தீர்!! கவிதை எழுதினீர் !!
போராட்டங்களில் கலந்து கொண்டீர் !! மேடைகளில் முழங்கி கொண்டீர்!!
இப்போது மட்டும் எம்மாணவ செல்வங்கள் கூடும் கல்விச்சாலைகளை கால வரையறை இன்றி மூடி விட்டீரே !!
சரஸ்வதிக்கே விலங்கா?
மாணவர் சிந்திக்க கூடாதா?
அவர்கள் நாட்டின் தூண்கள்.அப்துல் கலாமின் கனவினை நனவாக்க புறப்பட்டவர்கள்..
அவர்களுக்கு அரசியல் தெரியாது..ஆனால் ஈழ மாணாக்கரின் வலிகளை உணர முடியும்..ஈழத்தில் உள்ள உறவுகளுக்கு குரல் கொடுக்கும் எம் மாணவ செல்வங்களை முடக்க நீர் ஆரையா??
இதெல்லாம் உமக்கு சர்வாதிகாரமாக தெரியவில்லையா ??

ஏழை பாலைகளின் வயிற்றில் அடித்து அவர்களை மேலும் ஏழைகளாக்கி இரண்டு ரூபா அரிசிக்கு அலைய வைத்து அதையே ஓட்டுக்களாக்கி நாற்காலியை பிடித்து விட்டு இப்போ மின்சாரத்தையும் கொடுக்காமல் நாட்டாமை செய்கிறீர்களே!!
இது சர்வாதிகாரம் இல்லையா??

தமிழ் நாட்டில் உள்ள சினிமா ரசிகர்கள் போல் அதீத ஆர்வம் உள்ளோர் எனக்கு தெரிய எங்கும் இல்லை.அவர்களின் ஆர்வத்தையே சாதகமாக்கி இலவச வர்ண தொலைகாட்சி என்ற பெயரில் உங்கள் சானல்களையே மாத்தி மாத்தி போட்டு மானாடி மயிலாடி அவர்களின் வாழ்கையை ஆடி ஆடி கறக்கிரீர்களே இது எல்லாம் சர்வாதிகாரம் இல்லையா ?

திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அற்புத நோக்கங்களுக்காக உதயமான உன்னதமான கட்சியையே உங்கள் குடும்ப வருமானத்துக்கும் வாரிசு அரசியலுக்கும் பாடு படும் அடிமைக்கட்சி ஆக்கி உள்ளீர்களே !!
இந்த கட்சியில் உண்மை நோக்கத்தோடு உழைக்கும் உன்னத மக்கள் , இளைய சமுதாயத்தினர் எல்லாம் உங்கள் குடும்பத்துக்கு செருப்பாக மாற விட்டால் முன்னுக்கே வர முடியாது என்பது நீங்கள் அறியாததா ?
உறிஞ்சும் வரை உறிஞ்சி விட்டு சக்கை துப்பும் அரசியில் நீங்கள் பழக்கியது தானே?
வைகோவை கேட்டு பார்த்தால் வரலாறு பேசும்.
இதெல்லாம் சர்வாதிகாரத்தின் சில முகங்கள் தானே!!

தெரியவில்லையா ? தெரியவில்லையா ? என்று கேட்டு கொண்டே போனால் எனக்கு எவ்வளவு கேட்பது என்றே தெரியாமல் போய்விடும் ...

தமிழகத்து அண்ணலே !!
தமிழினத்தின் பாதுகாவலர் என்ற பெயரில் இருக்கும் அழுங்கு பிடியாரே !!
எம் தலைவனை பற்றி உமக்கு என்னய்யா தெரியும்?
அவனை பற்றி பேச உமக்கு என்னையா அருகதை இருக்கிறது ??
அவன் அதிகம் பேசுவதில்லை...தப்பித்தீர்!!
ஆனால் அவன் செயல்கள் பேசும் பார்த்து கொண்டு தானே இருக்கிறீர்!!
உமக்கு ஆயுள் அதிகமையா...வரலாறு படைக்கப்படும் போது வசவுகள் வரத்தான் செய்யும்..இருந்து பாரும் இனித்தான் ஆரம்பம்..

பேசிப்பேசியே பல பேர் குடி கெடுத்தவரே!!
இன்று எம்மினத்தின் ஒவ்வொரு உயிரின் அழிவிலும் உமது பங்கு பெரியது..
உமது இனத்தை அழித்து தான் உமது குடும்ப அரசியல் நடத்த வேண்டும் என்பது உமது விருப்பம்.ஆனால் மக்களின் விருப்பம் எண்டும் ஒன்று இருக்கல்லவா?

எம் தலைவன் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்...இன்று ஒரு சிங்களன் கூட நிம்மதியாக உறங்க முடியாது..உமது அரசின் ஆதரவோடு நடக்கும் யுத்தத்தில் மிகச்செறிவான தொழிநுட்ப உதவியோடு எம் மக்களை இலங்கை இராணுவ வான் கலங்கள் துல்லியமாக தாக்குமிடத்து எம் மறவர்களின் குருவிகள் எம்மாத்திரம்??டார்ச் வெளிச்சத்தோடு பறந்தவர்கள் தவறியும் கூட பொது மக்கள் மேல் விழவில்லையே ?
இலக்கு தவறி விட்டது என்று கூறினாலும் என் மனம் சொல்கிறது அவன் பொது மக்களின் இழப்பை தவிர்க்கவே கடைசி வரை இலக்கை தவற விட்டும் கூட போராடி இருப்பான் என்று...ரூபன் அண்ணாவின் கடிதத்தை படித்து பாருமையா எல்லாம் புரியும் ..தலைவனின் கண்ணியம் தெரியும் ...

இன்று எம் மேல் இன ஒழிப்பு யுத்தத்தில் ஈடுபடும் மகிந்த,கோத்தபாய,சரத் பொன்சேகா ,அரசியல் வாதிகள் ,இராணுவத்தினர் என்று எல்லோரும் தங்கள் குடும்பத்துக்கு ஏதும் நடக்கும் என்றால் துணிந்து போரிடுவார்களா? இல்லை அவர்களால் தங்கள் உறவுகளை காப்பாற்ற தான் முடியுமா? அவர்கள் தங்கள் மேல் வைத்த நம்பிக்கையை விட எம் தலைவன் மேல் வைத்த நம்பிக்கை பெரிது.எதிரி கூட எம் தலைவனை நம்பும் போது நீர் எம்மாத்திரம் ஐயா ??
எமது நோக்கம் பழிக்கு பழி அல்ல..இது ஒரு விடுதலை போராட்டம்..விடுதலை வேட்கையில் எரிந்து பெறுவோமே அன்றி இன்னோர் இனத்தை அழித்தோ அல்லது எவரிடமும் இறைஞ்சி தான் பெறுவோம் என்று ஒரு போதும் நினையாதீர்!!

அரியணை சாதனையாளரே!!
உமக்கு தான் ஆட்சி மாற்றங்களும் பதவி போகங்களும்..
எமது தலைவருக்கு நாங்கள் கொடுத்த ஆசனம் உயிராசனம்.இது உணர்வால் வந்த ஆசனம்.உமக்கு புரியாது என்றபடியால் அதை பற்றி அதிகம் விளக்கவில்லை.

சர்வாதிகாரி என்று தலைவரை பற்றி சொன்னது உமக்கு தற்காலிக பாதுகாப்பாக இருக்கலாம்.ஆனால் இது உமக்கு நீரே வைத்து கொண்ட நிரந்தர ஆப்பு எண்டது போக போக தெரியும்.('நுணலும் தன் வாயாலே கெடும் '). இது 'அம்மாவோட ' அப்பப்ப விளையாடுற சொல்லாடல் இல்லை என்று நீர் விளங்கி கொள்ளும் காலம் தொலைவில் இல்லை.

சரி விசயத்துக்கு வருவம்...
இனத்தை அடமானம் வைத்து மீதியை அழிச்சு , கலைஞ்சிருந்த குடும்பத்தை சேருற மாதிரி ஒரு நாடகம் ஆடி , பேரனோட பேரம் பேசி சன்னுக்கும் கலைஞருக்கும் சம்பந்தம் பேசி கடைசி வரை காங்கிரசுக்கு கால் செருப்பாகி நீர் அடைய போறது என்ன?
ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி அவ்வளவுதானே?
எங்க மக்கள் இப்போ தெளிவா இருக்கினம்..
முல்லை பெரியாரில, காவேரி பிரச்சினையில் நீர் ஒதுங்கி மற்ற மாநிலங்களுக்கு அடங்கி போன போதெல்லாம் அவர்களுக்கு நீர் காங்கிரசின் அடி வருடி என்னும் விஷயம் உறைத்து இருக்க வாய்ப்பில்லை..ஆனால் இன்று ஆறு கோடி மக்களின் தலைவராக இருந்து மத்தியில் நாற்பது இடங்களையும் கொண்டு பேரம் பேசும் வலுவுடன் தேவைப்பட்டால் அதட்ட கூடிய வழியிருந்தும் நீர் ஊமையாய் போனதன் அர்த்தம் ஒன்றரை கோடி சிங்களவன் எம்மினத்தை கொள்ளை கொள்ளையாய் இனப்படுகொலை செய்யும் போது வெறுமனே பார்த்து கொண்டிருப்பது மட்டுமல்லாது கொலைகளுக்கு மூல காரணமாக இருக்கும் இந்திய அரசாங்கத்தின் முக்கிய கூட்டாளியாக இருந்து கொண்டு விடுதலை பெறுவதற்காய் தம்முயிரை தியாகம் செய்வோரை கொச்சைப்படுத்தும் வார்த்தை ஜாலங்களில் வித்தை காட்டுவோருக்கு தக்க சமயத்தில் மக்கள் தீர்ப்பு வழங்கப்படும்.

யாருக்கு வாக்களிப்பது என்பதில் எம் உறவுகளுக்கு முரண்பாடுகள் இருக்கலாம்,
அதுக்கு காரணம் ஈழத்தில் எமக்கு உள்ளது போல் தாய்தமிழகத்தில் ஒரு தன்னலமற்ற உன்னதமான கொள்கைப்பற்று உள்ள உறுதியான தலைவன் இல்லாததே!!

ஆனால் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் எம் தொப்புள் கோடி உறவுகள் மிகவும் தெளிவாக உள்ளனர்.ஈழத்தில் எம் உறவுகளின் மரணத்தை நிறுத்துவதட்காய் கதறி, மன்றாடி,ஓங்கி குரல் கொடுத்து ஈற்றில் தீயில் உயிரையே ஆகுதியாக்கி எவ்வளவோ செய்தும் பயனில்லை.கொலைகாரனிடமே நியாயம் கேட்க முடியுமா ஐயா ?

ஆகவே !!
நீங்கள் வைத்திய சாலையில் கூடாரம் போடுங்கள்..அனுதாப அலைகளுடனே காலத்தை கடத்துங்கள் ..இடையிடையே ஈழத்தமிழருக்காய் நீலிக்கண்ணீர் வடியுங்கள் ...துடித்து வீழும் எம் பிணங்களின் மேலே ஆலோசனைகள் நடாத்துங்கள் .எங்கள் குழந்தைகளின் குருதியிலே உங்கள் தேர்தல் சாசனத்தை எழுதுங்கள்..

எது எப்படியோ ......

" காலம் பதில் சொல்லும் "

Tuesday 10 February 2009

புலம்பெயர் தமிழர்களின் போராட்டமும் சர்வதேச நாடுகளின் மனிதநேயமும்: புலம்பெயர் ஈழப்பொடியனின் உள்ளக்குமுறல்

வணக்கம் உறவுகளே! ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது.
இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது.கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள்.இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பதுசர்வதேச மனித நேய கனவான்களுக்கு தெரிந்த உண்மை.
கொழுத்தும் வெய்யிலில் தீக்குளித்தார்கள் மெல்பேர்ன் நகரில் 5000 தமிழர்கள். பட்டினியிருந்து உடல் வருத்தி கருணை காட்டுங்கள் என இளையோர் மன்றாடிக் கேட்டார்கள் சிட்னியில். கன்பராவில் 4000 தமிழர்கள் என்றுமில்லாதவாறு அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். ஆனாலும் என்ன பயன்? என்ன நடந்தது? ஒன்றுமேயில்லை.வெறும் காகிதத்தில் உப்புச் சப்பில்லாத பதில் அறிக்கைகள். அதுகூட சிறிலங்கா அரசாங்கத்தின் மனம் நோகக்கூடாது என்று கஸ்ரப்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பது எல்லோரும் அறிந்த கசப்பான உண்மை. ஆனால் கண்துடைப்புக்காக சில தாமதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஏனோ மனதுக்கு ஆறுதல். அவைகூட கானல் நீர்தான்.
வாழ்க்கை தேடி வந்த நாட்டையும் மக்களையும் குறை சொல்வதாய் சிலர் முணுமுணுப்பது என் காதுகளுக்கு கேட்கிறது. அடைக்கலம் தந்த நாட்டை ஆலயங்காளாக நினைக்கும் ஆயிரம் ஆயிரம் தமிழர்களில் நானும் ஒருவன். நாயிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட இந்த அகதிகளுக்கு கொடுக்கிறார்கள் இல்லையே என்று நினைக்கும் போதுதான் மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது.
உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் இதை ஒரு சீனாக்காரனோ இல்லை அவுஸ்ரேலிய பழங்குடியினரோ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?அவுஸ்ரேலிய குடியுரிமை உடைய அவுஸ்ரேலிய இளையோர் 4 பேர் உண்ணாவிரத போராட்டம் என்று ஒரு 5 நிமிடத்துக்கு இருந்தால் என்ன ஆகியிருக்கும்?அதுவே இந்த நாட்டின் முக்கிய பிரச்சினையாக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகியிருக்கும். நாடே திரும்பிப் பார்த்து கேள்வி கேட்டிருக்குமா? இல்லையா?ஆனால் அவுஸ்ரேலிய மண்ணின் குடியுரிமை பெற்ற இளையோர் 72 மணிநேரத்துக்கு மேலாக பட்டினியிருந்து குரல் எழுப்பி என்ன பலன்?கடைசியில் அவர்கள் அந்த புனிதமான அகிம்சை வழி போராட்டத்தை தொடர்ந்து நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டதுதான் வேதனை தருகின்றது.மகாத்மாகாந்தி மேல் கொண்ட வெறுப்பும் கோபமும் இன்னும் வெள்ளைக்காரர்களுக்கு போகவில்லை என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.
ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களையும் சமத்துவமாக சரிசமானமாக வேறுபாடின்றி பார்க்க வேண்டியது ஒரு நல்ல மனித நேய அரசின் கடமையாகும். மனிதநேயம் என்பதை வெறும் வாயினால் பேசினால் மட்டும் போதாது. மனச்சாட்சியோடு அதை செயல் வடிவத்திலும் காட்டவேண்டும்.அவ்வாறு வேறுபாடு காட்டப்படும் இடத்து அதை தட்டிக்கேட்க வேண்டியது எமது உரிமை. ஆனால் இது நமது வேலையல்ல. தாயகத்தில் நாள்தோறும் 50,100 என நரபலி எடுக்கிறது சிறிலங்கா பேரினவாத இராணுவம். இதற்கு துணைபோகிறது இந்திய இராணுவமும் சர்வதேச நாசகார படைகளும்.புலம்பெயர் தமிழர்கள் நாங்கள் இப்போது ஒரு தீர்மானத்தை ஒருமனதாக எடுக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா? தலைவர் பிரபாகரன் வன்னியை விட்டு ஓடிவிட்டாரா? விடுதலைப்புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு வலிமை குன்றிவிடார்களா?காடுகளுக்குள் ஓடி ஒழிந்துவிடார்களா? இன்னும் சில நாட்களில் ஆயுதங்களை எல்லாம் போட்டுவிட்டு சரணடையப் போகிறார்களா?இப்படியெல்லாம் பலகேள்விகளை கேட்டுக் கொண்டிக்கிறார்கள் பலபேர். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் தான். புலி பசித்தாலும் புல்லை தின்னாது.
ஒரு மாதமாக 1500 அப்பாவி பொதுமக்களை நரபலி எடுத்து 5000 விடுதலைப்புலிகளை கொன்றொழித்து விட்டதாக சர்வதேசத்துக்கு கணக்கு காட்டியிருக்கிறது மகிந்த அரசாங்கம். அதை அப்படியே மண்டையை ஆட்டி ஏற்றுக் கொண்டிருக்கிறது சர்வதேசமும் மனித நேய அமைப்புக்களும். கோடிக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழர்கள் கொட்டும் வெய்யிலிலும் உறைபனியிலும் நின்று "எங்களுக்கு நீதி வேண்டும், எங்கள் சொந்தங்களை மரணத்தில் இருந்து காப்பாற்றுங்கள்" என்று கதறிக் கூக்குரல் கொடுத்தும் சர்வதேசம் இறுக கண்மூடி தூங்குகின்றது. இல்லை தூங்குவதுபோல் நடிக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 2000 உயிர்கள் அநியாயமாக காவுகொள்ளப்பட்டுள்ளது. 2500 ற்கும் அதிகமானவர்கள் உடல் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள். கோவில்கள்,தேவாலயங்கள்,வைத்தியசாலைகள் என அடைக்கலம் தேடி புகுந்த மக்களையும் சர்வதேச போர் விதிமுறைகளையும் மதிக்காது குண்டு வீசி கொன்றொழித்து கொண்டிருக்கிறது சிங்கள பேரினவாதம். இதை கைகட்டி வாய்பொத்தி மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமா கொல்லப்படுவது புலிகள்தான் என்று அறிக்கையும் வேறு. வெள்ளைப்புறா வேசம் போட்ட குளிர் நாடும் அதற்கு ஆமாம் என்று தலையாட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
வயிறுபிளந்து குடல் சிதறிக்கிடக்கும் சின்னக்குழந்தையும் தள்ளாத வயதில் தலை இல்லாமல் துண்டுதுண்டாய்க்கிடக்கும் அப்புவும் ஆச்சியும் விடுதலைப்புலிகளா? இல்லை இரண்டு கைகளையும் இழந்து வலியால் குழறும் சின்னப்பொடியன் புலியா? என்னடா உங்கள் நீதி? காசாவில் நாலு வயது குழந்தை இறந்து விட்டால் வாய் கிழிய கத்துகிறீர்கள். நாய் ஒன்று நடுவீதியில் அடிபட்டால் நாலு பக்கத்துக்கு அனுதாப கட்டுரை எழுதும் சர்வதேச மனிதநேய வாதிகளே கொஞ்சம் மனச்சாட்சியோடு எங்கள் மக்களை திரும்பி பாருங்கள். இல்லையென்றால் நீங்கள் எடுத்திருக்கும் சில இறுக்கமான தீர்மானங்களையும் மனச்சாட்சி இல்லாத முடிவுகளையும் போல நாங்களும் அவசரமாக எடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறோம்.
தமிழர்கள் இழிச்சவாயர்கள்,குட்டக்குட்ட குனியும் மடையர்கள்.!, எது செய்யினும் ஏன் என்று கேட்பதற்கு நாதியற்றவர்கள்.!. தமிழன் உயிர் நாயிலும் கேவலமானது.!. மதிப்பில்லாதது. தமிழன் என்ற இனம் இனிமேல் இருக்கக்கூடாது. அவனுக்கென்று ஒரு நாடு வரலாற்றில் இருக்கவேகூடாது. இப்படியெல்லாம் நினைக்கும் சிங்களப்பேரினவாதத்துக்கும் சர்வதேச சண்டியர்களுக்கும் ஒன்றை மட்டும் கடைசியாய் கூறுகிறோம்.
என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்று எதிரியே தீர்மானிக்கிறான் என்று யாரோ ஒருவன் சொன்னான். முல்லைத்தீவிலும் புதுக்குடியிருப்பிலும் கொத்துக்குண்டுகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் எரிகுண்டுகளையும் வீசியும் அப்பாவி பொதுமக்களின் உயிர்களை கொன்றொழித்தும் போராட்டத்தின் வடிவத்தையும் பாதையையும் மாற்றி விட்டான் எதிரி.
வன்னியில் கேட்கின்ற அழுகுரல்களைப்போல் ஆயிரம் மடங்கு சிறிலங்காவின் மூலை முடுக்கெல்லாம் கேட்க வைப்பதற்கு தமிழர்களால் நினைத்தால் அரை நொடியில் முடியும். இதைத்தான் சிங்களப்பேரினவாதமும் மகிந்த அரசும் மனிதநேய அமைப்புக்களும் சர்வதேசமும் எதிர்பார்க்குமானால் அது வெகுவிரைவில் நடக்கும். அப்போதும் புலம் பெயர் தமிழர்களின் கைகளில் தான் இன்னொரு பணியும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இப்போது சர்வதேசமே கண்திறந்து பார் என கூக்குரலிட்டு கதறும் நாங்கள், சிங்கள தேசம் கூக்குரலிட்டு அழும்போது கொடுக்கு கட்டிகொண்டு ஓடிவரும் சர்வதேச சண்டியர்களை நடப்பதை பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டும் பார் என்று அடக்கிவைக்க வேண்டியதும் நாம்தான்.
என் அப்பு கட்டிய கோவணமே எனக்கு தேசியக்கொடி.!
உனக்கு வேண்டுமானால் பிரான்ஸ் கொடியோ அவுஸ்ரேலியக்கொடியோ தேசியக்கொடியாகலாம்
எனக்கு என் அப்பு கட்டிய கோவணத்துணியே தேசியக்கொடி

ஒடியல் புட்டும் மீன்கறியும் தான் எனக்கு எப்பொதும் தேசிய உணவு.
பிசாவும் மக்கசும் ருசிதான் -ஆனாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில் ஆக்கிய நண்டுக்குழம்புக்கு கீழ்தான்

கொள்ளை அழகுதான் பாரிஸ் கோபுரம்-ஆனாலும்
நெடிதுயர்ந்த பனையை விட கொஞ்சம் குறைவுதான் !

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னமாகாது
கடல் கடந்தாலும் கலாச்சாரம் மாறாது
நாகரிகம் என்று உன் நல்ல பெயரை நறுக்கி மாற்றலாம்
உன்னுள் ஒடும் உன் தாயின் குருதியை மாற்றலாமோ?

ராப்பும்(துள்ளிசை) பப்பும்(கேளிக்கை விடுதி) உனக்கு
அந்த மாதிரிஉடுக்கோசையும் காவடி ஆட்டமும்தான்
என்றும் எனக்கு முன்மாதிரி

அடையாளங்களை தொலைத்து விட்டு அசிங்கமாய் வாழ்வதைவிடஅம்மணமாக வாழ்வது மேல்.!

அன்புடன்ஈழப்பொடியன்

Monday 9 February 2009

சிறிலங்கா படையினரின் தாக்குதலால் காயமடைந்தோரை கப்பலில் கொண்டு செல்லும் முயற்சி தடை

சிறிலங்கா படையினரின் எறிகணை, பல்குழல் வெடிகணை, வான் தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்களை கப்பலில் கொண்டு செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று மேற்கொண்ட முயற்சி சிறிலங்கா படையினரின் தாக்குதலினால் தடைப்பட்டுள்ளது.
காயமடைந்தோரை மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கும் புல்மோட்டைக்கும் கொண்டு செல்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சியை மேற்கொண்டது.

மாத்தளன் கடற்கரையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் செல்வதற்காக அந்த இடத்தை தெரிவு செய்து அதனை அறிவிப்பதற்கு கடற்கரைப் பகுதிக்கு இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் சென்ற போது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலை அடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரி அந்த இடத்தில் இருந்து தப்பியோடி வந்து விட்டார்.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கத்தினை வன்னியை விட்டு வெறியேற வேண்டும் என உத்தரவிட்டதனையடுத்து அவர்களும் இன்று வன்னியை விட்டு கப்பலில் வெளியேற இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.